Wednesday, December 31, 2008

பாடல் -6

மானே! நீ நென்னலை நாளவந் துங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ!
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும்எமக்கும்
ஏனோர்க்கும் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய்!

பொருள்:

எழுப்புபவர்:

மான்விழி போன்ற மருட்சியுடைய விழிகளையுடையவளே! "நாளைக்கு நானே வந்து உங்களையெல்லாம் எழுப்புவேன்" என்று நேற்று நீ சொன்னாயே! உனக்கு வெட்கமில்லையா? அந்தச் சொல், எந்தத் திசையில் போயிற்று என்பதைச் சொல்! இன்னும் பொழுது விடியவில்லையா? வானுலகத்தாரும் நிலவுலகத்தாரும் பிறவுலகத்தாரும் அறிதற்கரியவன் இறைவன். அவனுடைய மேலான கழலணிந்த திருவடிகள் எளியவர்களாகிய நமக்குத் தானாகவே வந்து நமைக்காத்து ஆட்கொண்டு அருள்வன. அந்தத் திருவடிகளைப் பாடிவந்த எங்களிடம் வாய்திறந்து பேசினாயில்லை; உன் உடல் உருகினாயில்லை. உனக்குத்தான் இந்நிலை பொருந்தும். எங்களுக்கும் மற்றவர்களுக்கும் தலைவனாகிய சிவபெருமானைப் பாடுவாயாக.

பாடல் -5

மாலறியா நான்முகனும் காணா மலையினைநாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்!
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மையாட் கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடி சிவனே! சிவனே! என்று
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்!
ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய்!

பொருள்:

எழுப்புபவர்:

இறைவன் எல்லையற்ற அருள்மலை; அந்த மலை திருமாலால் அறிய முடியாதது; நான்முகனால் காண இயலாதது. அந்த மலையை நாம் அறிந்துவிட முடியும் என்பதுபோல் மற்றவர்கள் நம்பும்படியான பொய்யை, பாலும் தேனும் ஒழுகப் பேசிய வாயினையுடைய வஞ்சகியே! வாசல் கதவைத் திற! இறைவன் மண்ணுலகினராலும், விண்ணுலகினராலும், பிற உலகினராலும் காணுதற்கு அருமையானவன், அவனுடைய திருக்கோலத்தையும், எளியவர்களாகிய நம்மை ஆட்கொண்டு அருளிச் சீராட்டுகின்ற, பெருங்குணத்தையும் பாடுகின்றோம்; "சிவனே! சிவனே!" என்று உரக்கப் பாடுகின்றோம். இந்த ஒலி கேட்கும் நீ உணர்ந்தாயில்லை! உணர்ந்து விழித்தாயில்லை! மணம் பொருந்திய கூந்தலை உடையவளே! இதுதான் உன் தன்மை போலும்!

பாடல் -4

ஒண்ணித் திலநகையாய்! இன்னும் புலர்ந்தின்றோ?
வண்ணக் கிளிமொழியார் எல்லோரும் வந்தாரோ?
எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே!
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உள்நெக்கு நின்றுருக யாமாட்டோம் நீயேவந்து
எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்!

பொருள்:

எழுப்புபவர்:

ஒளி பொருந்திய முத்தினைப் போன்ற பற்களை உடையவளே! இன்னும் பொழுது விடியவில்லையா?

உள்ளே இருப்பவள்:

அழகிய கிளிபோல மொழி பேசும் நம் தோழியர் அனைவரும் வந்து விட்டனரோ?

எழுப்புபவர்:

எண்ணிப் பார்த்து உள்ளபடி சொல்கின்றோம்; ஆனால் நேரமாகும். அதுவரையும் கண் உறங்கிக் காலத்தை வீணாக்காதே! தேவர்களுக்கு ஒப்பற்ற அமுதமானவனை, மறகள் பேசுகின்ற மேலான பொருளை, கண்களுக்கு இனியவனைப் பாடி மனம் கசிந்து, உள்ளம் உடைந்து நின்று உருகுகின்றோம். ஆதலால் நாங்கள் எண்ணிக் கூற இயலாதவர்களானோம். நீயே வந்து எண்ணிக்கொள்! எண்ணிக்கை குறைந்தால் மீண்டும் போய் உறங்கு!

பாடல் -3

முத்தன்ன வெண்ணகையாய்! முன்வந் தெதிர்எழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதன்என் றள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்!
பத்துடையீர்! ஈசன் பழவடியீர்! பாங்குடையீர்,
புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற் பொல்லாதோ?
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ?
சித்தம் அழகியார் பாடாரோ? நம் சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்!

பொருள்:

எழுப்புபவர்:

முத்தினைப் போன்ற வெண்மையான பற்களை உடையவளே! முன்பெல்லாம் நீ, எங்களுக்கு முன் எழுந்து எங்கள் எதிரே வந்து "என் அப்பனே! ஆனந்தனே! அமுதனே!" என்று வாயூறி இனிக்க இனிக்க இறைவனைப் புகழ்வாய்! எழுந்து வந்து உன் வாசற் கதவைத் திற!

உள்ளே இருப்பவள்:

நீங்கள் இறைவனிடம் பற்றுடையவர்கள்; இறைவனுடைய பழைய அடியார்கள்; அவனைப் புகழும் முறைமை பெற்றவர்கள். நான் புதிய அடிமை! உங்கள் பெருமையால் என்னுடைய சிறுமையை நீக்கி ஆட்கொள்ளலாகாதோ?

எழுப்புபவர்:

உன் அன்புடைமை எங்களுக்குத் தெரியாதா? அதை எல்லோரும் அறிவோம். அழகிய மனமுடையவர்கள் நம் சிவபெருமானைப் பாடாமலிருப்பரோ? உன்னை எழுப்ப வந்தோமே நாங்கள், எங்களுக்கு இவ்வளவு பேச்சும் வேண்டியதுதான்.

பாடல் -2

பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்
பேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ? நேரிழையாய்! நேரிழையீர்!
சீசீ இவையுஞ் சிலவோ? விளையாடி
ஏசும் இடமீதோ? விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதந் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க் கன்பார் யாம் ஆரேலோர் எம்பாவாய்!

பொருள்:

எழுப்புபவர்:

சிறந்த அணிகலன்களையுடைய பெண்ணே! இரவும் பகலும் நாம் பேசும்போதெல்லாம் "யாவும் கடந்து நிற்கின்ற ஒளிவடிவமாகிய இறைவனுக்கு என் அன்பு" என்று சொல்லுவாய்! அந்த அன்பை இந்த மலர்ப் படுக்கையின் மீது எப்போது வைத்தாய்!

உள்ளே இருப்பவள்:

சிறந்த அணிகலன்களை நான் மட்டும் அணிந்திருக்கவில்லை! நீங்களும்தான் அணிந்திருக்கிறீர்கள், தோழிகளே! சீ! சீ! நீங்கள் பேசிய இவை கொஞ்சமோ? விளையாடி ஏசிக் கொள்ளும் இடம் இதுவா?

எழுப்புபவர்:

தேவர்களும் வணங்குதற்கு அரியதாகி, அவர்கள் தங்கள் நிலைமைக்கு இரங்கிக் கூச்சப்படுகின்றவாறு உள்ளவை அவன் திருவடிகள். ஒளிமயமான அவன், அந்தத் திருவடிகள் இந்த மண்ணில் படும்படி வந்தருளி நாம் காணுமாறு தந்தருள்வான். அவன் சிவலோகன், திருச்சிற்றம்பலத்தில் எழுந்தருளியிருப்பவன். நாம் யார்? அவன் அடிமைகளே!

பாடல் -1

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்
மாதே! வளருதியோ? வன்செவியோ நின்செவிதான்!
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே! என்னே!
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்!

பொருள்:

எழுப்புபவர்:

ஒளி பொருந்திய அகன்ற கண்களையுடைய பெண்ணே! தோற்றமும் இறுதியும் இல்லாதவன் சிவபெருமான்; அரிய பேரொளியானவன். அவனைப் பாடுகின்றோம்; அந்தப் பாடலைக் கேட்டபின்னும் நீ உறங்குகின்றாயோ? உன் செவி என்ன, கேளாத வன்செவியா? தேவதேவனை, கழலணிந்த அவன் திருவடிகளை நாங்கள் வாழ்த்துகின்ற ஒலி வீதியெல்லாம் நிறைந்தது. இதைக் கேட்ட ஒருத்தி பக்தி மேலீட்டால் விம்மி விம்மி மெய்ம்மறந்தாள்; மலர்ப் படுக்கையிலிருந்து புரண்டு விழுந்தாள்; எதற்கும் பயன்படாதவள் போல் நினைவற்றுக் கிடக்கிறாள்! அவள் அல்லவா இறைவனிடம் அன்புடையவள்! எங்கள் தோழியாகிய நீயோ உறங்குகின்றாய். என்னே உன் தன்மை!